சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள், சேவை வழங்குகின்ற நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டுநர்கள் மற்றும் சாரதிகள் இந்த ஆண்டும் பதிவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை மேலும் ஒரு வருடத்தினால் நீடிப்பதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
கொவிட் தொற்று நோய் நிலைமையின் காரணமாக சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவரளுக்கு சலுகை வழங்கும் அரசின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் இந்த சலுகை பிரகடணப்படுத்தப்பட்டது. இந்த வருடமும் அந்தச் சலுகையை மேலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தற்பொழுது சுற்றுலா ஹோட்டல்கள், சேவை வழங்கும் நிலையங்கள், வழிகாட்டுநர்ர்கள் மற்றும் சாரதிகளை பதிவு செய்வதை துரிதப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் சுற்றுலாத் துறையில் தங்குமிடங்களை வழங்குகின்றவர்களின் பதிவு 39% ஆல் அதிகரித்துள்ளதுடன் சேவைத் துறைகளின் பதிவுகள் 26% ஆல் அதிகரித்துள்ளது. சுற்றுலாச் சட்டத்தின் பிரகாரம் சகல சுற்றுலாச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாச் சேவை வழங்குநர்கள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டிய போதும் அனேகமான சுற்றுலாச் சேவை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் இது வரை அதிகாரசபையில் பதிவு செய்யதிருக்கவில்லை. கொவிட் தொற்று நோய் நிலைமையில் அரசினால் வழங்கப்பட்ட சலுகைகள் இவர்களுக்கு வழங்கும் போது கூட பலதரப்பட்ட பிரச்சினைகள் எழுந்தது என்றும் இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு இந்த ஆண்டில் சுற்றுலாச் சேவை வழங்குநர்களின் பதிவினை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தோடு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெற்ற வழிகாட்டுநர்கள் மாத்திரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டல் சேவைகளை வழங்குவதற்கு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கட்டாயப்படுத்தியுள்ளது. பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெற்றிராத சுற்றுலா வழிகாட்டுநர்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டல் சேவையை வழங்குவதற்கு ஈடுபடுத்திக் கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சகல சுற்றுலா அபிவிருத்தி நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. சுற்றுலா பொலீசின் ஊடாக தற்பொழுது அதற்குரிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவ் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது நாடு பூராகவும் சுற்றுலா வழிகாட்டுநர்கள் 5,000 இற்கு அண்மிய அளவில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் தேசிய வழிகாட்டுநர்கள் 1,680 பேர், சாரதி வழிகாட்டுநர்கள் 1,388 பேர், பிரதேச வழிகாட்டுநர்கள் 1,667 பேர் மற்றும் வதிவிட வழிகாட்டுநர்கள் 98 பேர் என உள்ளடங்குகின்றனர். அவர்களுக்கு பொருத்தமான பயிற்சியின் பின்னர் உரிய அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு இவ்வாண்டின் போது இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கைகளுக்கு ஏற்ப கடந்த 07 ஆம் திகதி வரை இந்நாட்டுக்கு 104,739 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த சனவரி மாதத்தில் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,327 ஆகும். இந்த மாதத்தின் (பெப்ரவரி) முதல் 7 நாட்களின் போது இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22,412 ஆகும். 2021 ஆம் ஆண்டு நிறைவடையும் போது 194,495 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் முதல் 38 நாட்களின் போது இந்நாட்டுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பது ரசியாவிலிருந்தாகும். அத்தோடு அந்த எண்ணிக்கை 16,844 ஆகும். இந்தியாவிலிருந்து 14,178 பேர் வருகை தந்துள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,007 ஆகும். மேலும் உக்ரேயின், ஜேர்மன், பிரான்ஸ், போலந்து, அவுஸ்திரேலியா, கஸகிஸ்தான் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்து இந்த வருடத்தின் முதல் 37 நாட்களின் போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.