சுற்றுலா மேம்பாடு தொடர்பாக இலங்கைக்கும் ஜோர்ஜியா நாட்டுக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் அப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை தற்பொழுது வரைவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மற்றும் இலங்கைக்கான ஜோர்ஜியா நாட்டு தூதுவர் ARCHIL DZULIASHVILL என்போருக்கிடையே இன்று (16) ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எட்டப்பட்டது. உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள சுற்றுலா அமைச்சு அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜோர்ஜியா நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் இலங்கைக்கு வரவழைத்துக் கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜோர்ஜியா நாட்டுத் தூதுவர் இதன் போது கூறினார். ஜோர்ஜியா, கஸகஸ்தான் மற்றும் அசர்பைஜான் போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தூதுவரிடம் குறிப்பிட்டார்கள். அந்த மூன்று நாடுகளில் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்படுத்துநர்கள் மற்றும் சுற்றுலா முகவர்களுடன் கலந்துரையாடல் சுற்றொன்றை நடாத்த ஏற்பாடு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார். ஜோர்ஜிய தூதுவர் இது தொடர்பான தனது உடன்பாட்டைத் தெரிவித்தார். இலங்கை நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தமது பாராட்டுக்களை தெரிவித்த ஜோர்ஜிய தூதுவர் எதிர்காலத்தில் ஜோர்ஜியாவில் இலங்கையை பிரபல்யப்படுத்துவதற்கு விசேட மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கும் உடன்பாட்டைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது ஜோர்ஜிய தூதுவருடன் சிரேட்ட ஆலோசகர் LASHA JAPARIDZE மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.