இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஐந்து பிரதான நாடுகளை இலக்கு வைத்து விசேட ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்துவதை துரிதப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த திட்டங்களை துரிதப்படுத்துமாறு சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்கு அமைச்சர் அறிவுரை விடுத்துள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சபை மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (25) அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக, இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டத்தையும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, எதிர்வரும் மாதங்களில் அந்த நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு குறுகிய கால மற்றும் நீண்ட கால ஊக்குவிப்புத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். பயண முகவர் சந்திப்பு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விசேட ஊக்குவிப்பு திட்டங்கள் இதன் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை சுற்றுலா முகவர் நிலையங்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு கவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இந்த ஊக்குவிப்புகளில் கொவிட் தடுப்பூசியை வெற்றிகரமாக மேற்கொண்ட நாடாக இலங்கையை பிரபல்யப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதே சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் இலக்காக இருக்க வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். அதன் அடிப்படையிலேயே நிறுவனத்தின் சகல செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஆக்கபூர்வமான பிரேரணைகள் ஊடாக இதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடம் ஜனவரி முதல் அக்டோபர் 24 வரை 54,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 13,547 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாகவும், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இன்று வரை 16,451 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ரஷ்ய கூட்டமைப்பு, ஜெர்மனி, மாலைத்தீவு, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்தவர்களே வருகை தந்த பயணிகளாவர்.