இலங்கையின் சுற்றுலா மற்றும் விமான சேவைத் துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லேவுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடாத்திய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் முன்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கையின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதை சுட்டிக்காட்டினார். நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கும் கோவிட் தடுப்பூசியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் அதிகளவிலான இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான சமய உறவுகளை கருத்திற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை பௌத்த பக்தர்கள் தம்பதிவ யாத்திரைகளில் கலந்து கொள்வது போல இந்திய பக்தர்கள் ராமாயணத்தை அண்டிய தலங்களைப் பார்வையிட இலங்கைக்கு வருகை தருகிறார்கள். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமய, கலாச்சார மற்றும் தொல்பொருளியல் சுற்றுப்பயணங்களை ஊக்குவிக்க இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இணைந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பரிந்துரைத்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இதனை ஒப்புக் கொண்டு ஏற்கனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இலங்கையில் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிவரும் ஆதரவை இலங்கை அரசு பாராட்டுகிறதெனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
புகைப்பட விபரம்:
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் காட்சி