- இந்த ஆண்டின் கடந்த 09 மாதங்களுக்காக 101.44 மில்லியன்அமெரிக்க டொலர்கள் சுற்றுலா முதலீட்டு அனுமதிக்காக சமர்ப்பிப்பு.
- 92.176 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா முதலீட்டுக்கு அனுமதி
- கோவிட் தொற்றுநோய் சூழ்நிலைக்கு மத்தியிலும் நாட்டில் சுற்றுலா முதலீடுகளுக்கு இதுபோன்ற திட்டங்களை முன்வைப்பது சிறந்த முன்மாதிரியாகுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான கடந்த ஒன்பது மாதங்களில் 101.44 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய திட்டங்கள் சுற்றுலா முதலீட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 92.176 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 33 சுற்றுலா முதலீடுகள் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவற்றில் 22 முதலீடுகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் கூட இலங்கையில் சுற்றுலா முதலீட்டிற்கான இத்தகைய முன்மொழிவுகள் ஒரு சிறந்த முயற்சியென அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி, இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொழுதுபோக்கு அடிப்படையிலான பூங்காக்கள், கேபிள் கார் திட்டங்கள், மிதக்கும் உணவகங்கள் மற்றும் நீருக்கடியிலான காட்சிக்கூடங்கள் என்பவற்றில் முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சமய, கலாச்சார தேசிய பாரம்பரியம், சாகச விளையாட்டு மற்றும் ஆயுர்வேத துறைகளில் இவைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சுற்றுலா முதலீடுகளுக்கான அங்கீகாரம் துரிதப்படுத்தப்பட்டது. இதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முதலீட்டு தொடர்புகள் என்ற பிரிவை நிறுவியுள்ளது. முதலீட்டு அங்கீகார செயல்முறை மற்றும் அதிக எண்ணிக்கையிலான நிரல் நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவு முதலீட்டு அங்கீகார செயல்முறையை எளிதாக்கும் மற்றும் துரிதப்படுத்தும். அதன்படி, 43 தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. மேலும் பல நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். இந்த துறையின் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கும் இலங்கைக்கு சுற்றுலா முதலீட்டை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். முன்னெடுக்கப்படும் சுற்றுலா முதலீடுகள் சுற்றுச்சூழலுக்கு சாதகமாக அமைவதில் கவனம் செலுத்துவதாக இருக்கும்.
அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் சுற்றுலா முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதே இதற்குக் காரணமாகும். எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.