சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க ராவண நீரருவியிலிருந்து விழுந்து காயமடைந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இஸ்ரேலிய யுவதியை இன்று (29) சந்தித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு தனது காதலனுடன் இலங்கைக்கு வருகை தந்த மேற்படி இஸ்ரேலிய இளம்பெண் ஈடன் சிறி (23), செப்டம்பர் 15 அன்று ராவண அருவிக்கு வருகை தந்தார். நீர்வீழ்ச்சியின் உச்சியில் உள்ள பாறையில் ஏறும் போது, அவர் தவறி விழுந்துள்ளார். பின்னர் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் தலையிட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளது. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், குறித்த பெண்ணின் தாய் மற்றும் தந்தையை இலங்கைக்கு அழைத்து வர அதிகார சபை முற்பட்டுள்ளதாகவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.
கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று காலை மருத்துவமனையில் குறித்த பெண்ணை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். நாளை அவர் இலங்கையிலிருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான வசதிகளை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த யுவதி சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தான் இலங்கையை மிகவும் நேசிப்பதாகவும், பூரணமாக குணமடைந்தவுடன் இலங்கைக்குத் திரும்ப வருவேனென நம்புவதாகவும் கூறினார்.