சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு, கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அமைச்சரவையின் சிபாரிசுகளுக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்க வங்கித் தலைவர்கள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் செயலாளருடன் நேற்று (10 ஆம் திகதி) மாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ் அறிவுரையினை வழங்கினார். கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அமைச்சரவையின் அங்கீகாரம் நிதி அமைச்சின் ஊடாக தமக்குக் கிடைத்த உடனே இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்க வங்கிப் பிரதானிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அத்துடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழிகாட்டல்கள் மற்றும் சுற்றுலாத் துறை வாகன சாரதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையில் உள்ள 144,117 பேருக்கு நிவாரணம் வழங்குவதங்கான சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (10) அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. அவ் அமைச்சரைப் பத்திரத்திற்கேற்ப சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத் துறை ஹோட்டல், வாழ்விடம், பிரயாண முகாமைத்துவ நிறுவனங்கள், வழிகாட்டிகள் சாரதிகளுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்.