சுற்றுலா வலயங்களை மின்துண்டிப்பிலிருந்து விடுவிக்குமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களைக் கோரியுள்ளார்கள். நேற்று (21) ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர் இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.
கொவிட் தொற்று நோயின் பின்னர் சுற்றுலாக் கைத்தொழில் மீண்டும் தலை தூக்கும் சந்தர்ப்பத்தில் மின் துண்டிப்பின் காரணமாக சுற்றுலாக் கைத்தொழிலுக்கு தடையொன்று ஏற்பட முடியும் எனவும் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்கள். தற்பொழுது சுற்றுலாக் கைத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் இது தொடர்பாக கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் இதன் காரணமாக ஆகக் குறைந்தது சுற்றுலா வலயங்களையாவது இந்த மின் துண்டிப்பிலிருந்து விடுவிக்குமாறு கௌரவ அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரமேஷ் பதிரண, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர போன்ற அமைச்சர்களும் இந்தக் கோரிக்கைக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மின்துண்டிப்பு இடம்பெறுவது 04 வலயங்களாகப் வகுத்து சுற்றுலா வலயங்களை அவற்றிலிருந்து விடுவிக்க முடியுமா என மின்சார சபையுடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக மின்வலுச் சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொகுகே அவர்களுக்குப் பதிலாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு சமூகமளித்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடு பூராகவும் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட சுற்றுலா வலயங்களின் எண்ணிக்கை 16 ஆகும். நிலாவெளி, மாதுகக மற்றும் அதனை சூழவுள்ள அருகம்பே, திருகோணமலை, கல்குடா, பின்னவல, தேத்துவ, பெந்தொட்ட, குச்சவெளி, கற்பிட்டி, உணவடுன, நீர்கொழும்பு, பேருவளை, கல்கிஸ்ச, யால மற்றும் எல்ல என்பன அந்த சுற்றுலா வலயங்களாகும்.