- வார இறுதி மற்றும் விடுமுறை தினங்களில் மூடியிருந்த சததென்ன சுற்றுலா வலயம் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனையுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது…..
- சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் புதியதொரு திட்டம்…….
வார இறுதி மற்றும் அரச விடுமுறை தினங்களில் மூடியிருந்த நுவரெலிய சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அமுல்படுத்துமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நுவரெலிய சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயத்தை வார இறுதி மற்றும் அரச விடுமுறை தினங்களில் மீண்டும் திறப்பதற்கும் அதனை சுற்றுலா கவர்ச்சி இடமாக மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த (17) ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கலந்துரையாடல் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.
சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயம் 2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதுடன் மிகவும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய பிரதேசமொன்றாகும். விவசாயத் திணைக்களத்திற்குரிய நுவரெலிய சீதா விதை உருளைக்கிழங்கு பண்ணைக்கு அருகில் அமைந்துள்ள இந்த சுற்றுலா வலயத்தின் பிரவேச வழி அமைந்திருப்பது மேற்படி பண்ணையின் நடுவிலாகும். இந்த இடத்திலிருந்து பிதுருதலாகல, கிரிகல்பொத, ஹக்கல மற்றும் நமுனுகுல போன்ற 09 பிரதான மலைத்தொடர்களை காண முடிகின்றமை விசேட அம்சமாகும். கடல் மட்டத்திலிருந்து 1,600 அடிகளுக்கும் அதிகமான உயரத்துடன் கூடிய இந்த சுற்றுலா வலயம் நூற்று ஐம்பத்து ஐந்து ஹெக்டயார் பரப்பளவைக் கொண்டது. இந்த நிலத்தின் உயரிய பகுதி ஐய்யாயிரத்து முன்னூறு அடி அளவான உயரத்துடன் இருப்பதுடன் அது ஹோட்டன்தென்ன உயரத்திற்கு சமமாகும். இந்த சுற்றுலா வலயத்தினுள் மலைநாட்டு தாழ்நிலங்கள், மலைநாட்டுக்குரிய கால்நடைகள் மற்றும் தாவரங்கள் பலவற்றை காண முடியும். தொற்றுநோய் இல்லாத நாட்களில் இந்த சுற்றுலா வலயத்தின் நாளாந்த வருமானம் ரூபா ஒரு இலட்சத்தைத் தாண்டிக் காணப்பட்டது.
இந்த சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயம் அமைந்துள்ள அரசாங்க விதை உருளைக்கிழங்கு பண்ணையின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்காமை தொடர்பான பிரச்சினையின் காரணமாக கடந்த சனவரி 27 ஆம் திகதி முதல் இந்த பண்ணை வார இறுதி மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடி வைக்கப்பட்டமையினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த சுற்றுலா வலயத்திற்கு பிரவேசிப்பதற்கு இயலாது போயின. இந்த நிலைமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களையும் வரவழைத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
கொவிட் தொற்றுநோயின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கும் இச்சந்தர்பத்தில் சுற்றுலா வலயத்தை மூடிவைத்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என அதிகாரிகளுக்கு கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த சததென்ன சுற்றாடல் சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ரூபா 17.2 பில்லயன் முதலீடொன்றை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் அதனை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது சகல தரப்பினர்களினதும் பொறுப்பாகும் என்றும் சுட்டிக் காட்டினார். இந்த ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் இங்கு அமைச்சருக்குக் கூறினார்.
சததென்ன சுற்றுலா வலயத்தில் ஜீப் வாகன சாரதிகளின் சங்கம் சமர்ப்பித்த பிரச்சினைகள் பலவற்றுக்கு துரிதமாக தீர்வு வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வலயத்திற்கு பிரவேசிக்கின்ற 04 கிலோ மீற்றர் வழியை துரிதமாக காபட் இட்டு திருத்தம் செய்து வழங்குதல், அந்த வலயத்தைப் பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக துரிதமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தை அபிவிருத்தி செய்யும் போது அந்த இடத்தில் சுற்றாடல் நிலைமைக்குப் பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சுற்றுலா வலயம் காலை 06 மணிக்கு திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் இங்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அஜந்த த சில்வா, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க, சததென்ன சுற்றுலா வலயத்தின் சபாரி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.