சுற்றுலா ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலிருந்து உள்ளூராட்சி மன்றங்கள் அறவிடுகின்ற வரிக் கட்டணங்களை திருத்துவதற்கும் மின் கட்டண சலுகையை மேலும் வழங்குவதற்கும் விசேட அமைச்சரவைப் பத்திரங்கள் இரண்டை சமர்ப்பிப்பதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். உள்ளூராட்சி மன்றங்களின் வரிக் கட்டணங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவைப் பத்திரம், அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சருடன் இணைந்து சமர்பிப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மின் கட்டண சலுகையை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தற்பொழுது வரைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டலொன்று, உணவகமொன்று அல்லது தங்குமிட வசதி வழங்கும் இடத்திலிருந்து ஆரம்பமாக முழுமையான செலவீனத்தில் 1% உச்சத்திற்கு உட்பட்டு அனுமதிப் பத்திரக் கட்டணமொன்றை அறவிடுவதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருடாந்தம் தமது வருமானத்தில் கருதத்தகு தொகையொன்றை உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் செலுத்துவதற்கு அந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய நிறுவனங்களினால் ஏனைய வரி மற்றும் கழிவு சேகரிக்கும் வரிக் கட்டணங்களும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு செலுத்தப்படுவதுடன் இந்த நிலைமையையும் கவனத்திற் கொண்டு அந்த வரிக் கட்டணங்களை திருத்தம் செய்வதற்கு எதிர்பாரக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிபிட்டார்.
மேலும் இலங்கை மின்சார சபையினால் சுற்றுலா ஹோட்டல்கள், உணவகங்கள், வதிவிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண சலுகையை மேலும் நீடிப்பது தொடர்பாகவும் அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் 2021 பெப்புருவரி 28 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட மின் கட்டண சலுகையை இவ்வருடம் முடியும் வரை நீடிப்பதற்கும், அதிக கேள்வி காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ஹோட்டல் கைத்தொழிலின் மின்சார அலகொன்றின் கட்டணத்தை ஏனைய கைத்தொழில்களுக்கு சமமாக இருக்கும் வகையில் சீர் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வதிவிடங்கள் தொடர்பாக 2020 மார்ச் மாதம் முதல் 2021 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இதுவரை கட்டணம் செலுத்தப்படாத சகல நிலுவை திரண்ட மின் கட்டணங்களை எதிர் வரும் ஆண்டின் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சமமான 36 தவணைக் கட்டணங்களில் செலுத்தும் சலுகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் காலம் முடிவடையும் வரை மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபையிடம் கோரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உரிய அமைச்சரவைப் பத்திரங்கள் இரண்டையும் மிக விரைவாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு உத்தேசிக்ப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மேற்கொண்ட கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டே இந்த இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. தற்பொழுது சுற்றுலாக் கைத்தொழில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதன் மூலம் அத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இந்த ஆண்டின் சனவரி மாதம் முதல் திசம்பர் 05 ஆம் திகதி வரை இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 115,190 ஆகும். திசம்பர் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையான முதல் 05 நாட்களின் போது மாத்திரம் 10,201 சுற்றுலாப் பிரயாணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்தியா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கஸகிஸ்தான், அமேரிக்கா, பிரான்ஸ், மாலைதீவு மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து இந்தச் சுற்லாப் பிரயாணிகள் வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் கூறினார்.