சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வரவழைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறக்கப்பட்டுள்ளதென்பதை உலகளவில் விளக்கமளிப்பதே இந்த வேலைத்திட்டமாகும். அடுத்த இரண்டு மாதங்களில் உலகின் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் சுமார் 25 பேர் இதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை 10 நோர்வே மற்றும் இந்தியச் சுற்றுலாப் பயண ஊடகவியலாளர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்நிகழ்ச்சி சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தால் நடத்தப்படுகிறது. 08 இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் தற்போது வடக்கிற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் போருக்குப் பின்னர் வடக்கின் தற்போதைய நிலைமை மற்றும் கோவிட் தொற்றுநோய் நிலைமையில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறக்கப்படுவது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
நோர்வேயின் இரண்டு முன்னணி யூடியூப் அலைவரிசைகளின் பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் தெற்கில் சுற்றுப்பயணம் செய்து, பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு எவ்வாறு திறக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து வருகின்றனர். இந்த இரண்டு குழுக்களும் கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் நாடு திறக்கப்பட்ட பின்னர் நாட்டிற்கு வருகை தந்துள்ள முதல் ஊடகக் குழுக்களாகும். அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யா, உக்ரைன், இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக இங்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழுக்களின் ஊடாக உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் இலங்கை பற்றிய செய்திகளை பரப்புவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலுள்ள பிரபல்யம் குறைந்த சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரியப்படுத்துவதும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் அறியத்தருவதும் இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இக்குழுவினர் மாத்தளை, கண்டி, கேகாலை, மஹியங்கனை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர். நாட்டு மருத்துவம், சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச விளையாட்டுகள் மற்றும் சமூகம் சார்ந்த சுற்றுலா குறித்தும் இதன்போது அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும்.