ஆசிய பிராந்திய சுற்றுலா அமைச்சர்கள் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. கோவிட் தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீட்டெடுக்குமுகமாக, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த செயற்திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Taregmd Ariful Islam மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். பங்களாதேஷின் சுற்றுலாத்துறையின் மீள் எழுச்சிக்கு இலங்கையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பங்களிப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், அந்த முயற்சிக்கு உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எந்த நேரத்திலும் முன்வருவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை நடாத்தி வருகின்றது. மேலும், பங்களாதேஷில் இருந்து ஒரு தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார். பௌத்த நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறை, சதுப்புநிலங்கள் மற்றும் கடலோரச் சுற்றுலா போன்றவற்றை இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடையே பிரபல்யப்படுத்த முடியுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கொழும்பிற்கும் வங்காளதேசத்தின் டாக்காவிற்கும் இடையே கப்பல் சேவையை (Cruise) தொடங்குவது குறித்தும் இரு தரப்பும் பரிசீலித்து வருகின்றன. எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
பிம்ஸ்டெக், சார்க் போன்ற பிராந்திய மாநாடுகளின் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தெற்காசிய நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாட்டின் மூலம் இந்த நாடுகளில் ஒருங்கிணைந்த சுற்றுலா செயற்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இக்கோரிக்கைக்கு உடன்பட்டதோடு, இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்து அமைச்சர்கள் மாநாட்டை விரைவில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு. ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.