கோவிட் தடுப்பூசி அட்டையைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, மொத்த மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் கோவிட் தடுப்பூசி அட்டையைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டால், தடுப்பூசி போடப்படாதவர்களை மேலும் ஊக்கப்படுத்த முடியும் என்று அமைச்சர் ரணதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதலின்படி, நாட்டில் வெளிநாட்டு சந்திப்புகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் அடுத்த வருடம் நாட்டில் பல நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பல சர்வதேச மாநாடுகள் மற்றும் சுற்றுலா நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சரின் கோரிக்கை தொடர்பில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப முடியுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், சுற்றுலாத்துறைக்கு சுகாதாரத் துறையின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஹெட்டியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் திரு. சஞ்சீவ முனசிங்க, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் திரு. அசேல குணவர்தன மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிக்கா விஜேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.