தற்போது டுபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2020 இல் இலங்கை கண்காட்சிக் கூடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, கடந்த 23 நாட்களில் 11,000 க்கும் அதிகமானோர் கூடங்களுக்கு வருகை தந்துள்ளதாக உறுதிப்படுத்துகின்றன.
எக்ஸ்போ 2020 கண்காட்சி இம்மாதம் 1 முதல் 2022 மார்ச் வரை நடைபெறும். 1,083 ஏக்கர் பாலைவன நிலத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. டுபாய் எக்ஸ்போ வாய்ப்பு, இயக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கருப்பொருள்களில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்போ கண்காட்சியின் வாய்ப்பு பிரிவில் 212 சதுர மீட்டர் பரப்பளவில் இலங்கை கண்காட்சி வளாகம் அமைந்துள்ளது. இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, முதலீட்டு சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளன. டுபாயில் உள்ள இலங்கை கொன்சூலர் துணை தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியன இந்த நிகழ்ச்சிக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளன என்று சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுசரணையில், 2018 இல் டுபாய் எக்ஸ்போவிற்கான தயாரிப்புகளை இலங்கை ஆரம்பித்தது. எதிர்பார்க்கப்பட்ட செலவு 580 மில்லியன் ரூபாவாக இருந்ததுடன் தொற்றுநோய் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை காரணங்களால் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் தேவையான நிதியை திரட்ட முடியவில்லை. மேலும், 2021 டிசம்பரில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு தலைமை தாங்க அழைப்பு விடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு கண்காட்சியின் ஆறு மாதங்களுக்கு 155.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் செலவு மதிப்பீட்டை ஒப்பிடும்போது செலவு மிகவும் குறைவானது. எனவே, டுபாய் எக்ஸ்போவில் மிகக்குறுகிய காலத்தில் வரையறுக்கப்பட்ட வளங்களுடனும், நிதி ஒதுக்கீடுகளுடனும் இலங்கை வளாகத்தின் பங்களிப்பு பாரிய வெற்றியாகும் என அதிகார சபை குறிப்பிடுகிறது.
டுபாய் எக்ஸ்போவில் உள்ள இலங்கை வளாகம், 2018 ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் குழுவால் வடிவமைக்கப்பட்டதுடன் டுபாய் எக்ஸ்போ அமைப்பாளர்களின் செலவில் அதை நிர்மாணித்தனர். டுபாயின் காலநிலை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் காரணமாக வடிவமைப்பின் சில பகுதிகள் மாற்றப்பட வேண்டியிருந்ததுடன் மேலதிக செலவுகளின்றி அவைகள் செய்து முடிக்கப்பட்டன.
இலங்கை வளாகத்தின் வடிவமைப்பு இலங்கையின் தனியான நீர்வாழ் நாகரிகத்தின் பிரதிபலிப்பாகும். இது ஒரு கவர்ச்சிகரமான இடமாக இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தை காட்சிப்படுத்துகிறது. இலங்கைக்கு பயணிப்பவர்கள் கானொளிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் கண்டுகளிக்கும்வாறாக அதன் பிரதிபலிப்புகள், வரலாறு, கலாச்சாரம், இயற்கை மற்றும் குடிமக்கள் தொடர்பாக பல்வேறு அம்சங்களை முன்வைக்கின்றன. இந்த தொழில்நுட்ப கூறுகள் வளாகத்தின் அடிப்படை வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டு கலைநயத்துடன் கலந்திருப்பது சிறப்பு.
இலங்கையின் பாரம்பரிய கலைகள், கைவினைகளில் அர்த்தமுள்ள மற்றும் சுறுசுறுப்பான அனுபவத்தை வழங்கும் மற்றுமொரு அம்சம் கைத்திறன் சாளரமாகும். கரும்புகள், பொம்மலாட்டங்கள், மட்பாண்டங்கள், சிற்பங்கள், பித்தளைகள், பித்தளை படைப்புகள் முகமூடி தயாரிப்புகள் மற்றும் பனையோலைகள் போன்ற பல கைவினைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அனுசரணையின் கீழ் இலங்கையின் பல்வேறு ஏற்றுமதியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக கூடங்களை அமைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை தொழில்முறைப் பட்டியல் (Roster) அடிப்படையில் விளம்பரப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கின்றது.
மேலும், இலங்கை தேயிலை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேயிலை கூடமானது இலங்கை வளாகத்திலுள்ள பலரையும் ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். தனியார் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இச்சேவை ஆறு மாத காலப்பகுதியில் பார்வையாளர்களை இலங்கையின்பால் ஊக்குவிக்கிறது. கண்காட்சியில் உள்ள அனைத்து கூடங்களிலும் இந்த தேநீர் சாலை பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் ஒரே அரங்கம் என்பதால் இலங்கை கூடத்திற்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்த முடிந்தது. இலங்கை கூடத்திற்கு வெளியே இலங்கையின் லக்சல கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் சிறப்பு சாவடியையும் அமைத்துள்ளதுடன் இதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வளாகத்தினுள் நடக்கும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பாரம்பரிய பத்திக் வடிவமைப்புகளை உள்ளடக்கிய ஆடை அலங்கார அணிவகுப்பு, இலங்கையை ஊக்குவிக்கும் திருமண நிகழ்வுகள், கலாச்சார நடனங்கள், இலங்கை நடனம் மற்றும் இசையை உள்ளடக்கிய பறை நிகழ்ச்சிகளுடன் ஏனைய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இலங்கை கலாச்சாரத்தில் சிபில் வெத்தசிங்கவின் 'அவ்வை வெஸ்ஸை நரியகே மகுளை' கதையை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் கதை அமர்வு மற்றும் மெனிகே மாகே ஹிதே' பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்த யொஹானி டி சில்வா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி போன்ற பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எக்ஸ்போ டுபாய் கண்காட்சியில் ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் எக்ஸ்போ டுபாய் கண்காட்சியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளார்.
டுபாய் எக்ஸ்போ 2020 இன் போது, தேயிலை சபை முதலீட்டு ஊக்குவிப்பு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் என்பன இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சாத்தியமான முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக தமது அமர்வுகளை ஏற்பாடு செய்யும். மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் தனது துறையில் முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் அமர்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையானது, 2021 டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து 2022 ஜனவரி ஆரம்பம் வரை இலங்கை இரத்தினக் கற்களின் கண்காட்சியுடன் விசேட விளம்பரம் ஒன்றை நடாத்தவுள்ளது. இங்கு பார்வையாளர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவையை ஊக்குவிக்கும் நோக்கில் இரத்தினக் கற்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இலவச விமான டிக்கெட்டுகளை வெல்லும் போட்டிக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா, பல ஆண்டுகளாக பெரும் பார்வையாளர் கூட்டத்தை எக்ஸ்போ 2020 டுபாய் நிகழ்ச்சியின்பால் கவரச் செய்து 31 மார்ச் 2022 அன்று நிகழ்ச்சி முடியும் வரை கண்காட்சியை அலங்காரப்படுத்தி வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட நிதி மற்றும் வளங்கள் போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்து, மிகக் குறுகிய காலப்பகுதியில் பாரிய பொறுப்பை நிறைவேற்றி, அனைவரின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இந்த வெற்றியைத் தொடருமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கைக் கொண்டுள்ளது.