வெளிநாடுகளில் தங்கியிருப்பதை விட உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அமுல்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்து நாட்டை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மினுவாங்கொடையில் நேற்று (23) இடம்பெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூர் தயாரிப்பு விற்பனை நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மினுவாங்கொடையில் வதுலா பூங்காவொன்றின் நிர்மாணப்பணியின் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 20 மில்லியன் ரூபா செலவில் 16 விற்பனைக் கூடங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளூர் தயாரிப்பு விற்பனை நிலையம் இந்த ஆண்டு நிறைவடையவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் இதுபோன்ற மேலும் பதினொரு விற்பனை நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. பேலியகொட, ஏக்கல, அத்தனகல்ல, மாகேவிட்ட, கணேமுல்ல, மெல்லவகெதர, திவுலபிட்டிய மற்றும் எவரியவத்தை ஆகிய நகரங்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, நாடு முழுவதும் இதுபோன்ற நூற்றி இருபது விற்பனை நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.
சுற்றுலாத்துறை அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த மினுவாங்கொடையை உறக்கமற்ற நகரமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் நெருக்கடியை நாம் எதிர்கொண்டுள்ளோம். நாட்டைத் திறந்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவுடன் தற்போதைய பிரச்சினைகளை தீர்க்கும் சாத்தியம் உள்ளது. மேலும் சுகாதாரக் கொள்கைகளை அனைவரும் சரியாக பின்பற்ற வேண்டும். சமீபகாலமாக ஏராளமான மனித உயிர்களை இழந்துள்ளோம். நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாடு வேண்டுமென்றே அந்த நிலைக்கு தள்ளப்பட்டதென நான் நினைக்கிறேன். இந்த நெருக்கடியால் பிரச்சினைகள் எழுந்திருப்பது நம் நாட்டில் மட்டுமல்ல. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இன்று பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
நாம் வெளிநாடுகளில் தங்கி வாழும் நாடு. அந்த நாடுகளில் சளி பிடித்தால் எமக்கு நிமோனியா வரும் என்பது வரலாறு. இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரும் 12ம் திகதி வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளோம். கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கிராமிய உணவுகளை உற்பத்தி செய்யும் மக்களுக்கு அத்தியாவசிய உணவு வழங்கும் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இவற்றின் பெறுபேறுகளுக்கு சிறிது காலம் எடுக்குமெனினும் இவைகள் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய நிலையான திட்டங்களாகும்.
சுகாதார வழிகாட்டல்களை சரிவர பின்பற்றாமையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாடு முடக்கப்படும். நாடு மீண்டும் முடக்கப்படும்போது எம்மை வெளியேறச் சொல்கிறார்கள். அரசில் இதையெல்லாம் எதிர்கொண்டோம். நம்மிடம் குறைகள் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் திட்டம் எம்மிடமுள்ளது. எதிர்க்கட்சிகளிடம் எந்தத் தீர்வுமில்லை. சஜித் பிரேமதாச கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர்களை விட சிறந்த திட்டத்தை வைத்துள்ளனர். தடுப்பூசியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நாங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து நாட்டை மீண்டும் திறக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் உணவுப் பஞ்சம் வரப்போவதில்லை. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. எமது பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் அந்த பிள்ளைகளின் பிள்ளைகளை எதிர்காலத்தில் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நம்புகின்றோம்.
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் மினுவாங்கொட நகர சபைத்தலைவர் நீல் ஜயசேகர ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.