2021 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 05 ஆரோக்கியமான சுற்றுலா பயண முடிவிடங்களுள் (Wellness Tourism Destination 2021) ஒன்றாக இலங்கை இடம் பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். Global Wellness Institute என்ற உலகளாவிய ஆரோக்கிய நிறுவனத்தால் இவ்விதம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் நிலைமைக்குப் பிறகு உலகில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் மன மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக இலங்கையில் பின்பற்றப்படும் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின்படி, சுற்றுலாத்துறையில் ஆரோக்கியம் நிறைந்த இடங்கள் பல உள்ளன எனவும், அவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சியெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா கண்காட்சியை தொடர்ந்து நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பிரான்சின் சுற்றுலாத்துறை செயலாளர் Jean Battiste Lemoyne, எகிப்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் Khaled el Anany, கிரேக்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் Vassilis Kikilias, ஜோர்டான் சுற்றுலாத்துறை அமைச்சர் Nayef Hamidi Mohomad Al Fayez, டொமினிகன் குடியரசு சுற்றுலாத்துறை அமைச்சர் David Collado, மொரிஷஸ் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரின் பிரதிநிதி Lovis Steven உள்ளிட்ட அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் சாதுரியமான நடவடிக்கைகளால் இலங்கை கோவிட் நிலையிலிருந்து பாதுகாப்பான நாடாக மாறி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியதோடு, உலகளாவிய தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக உலகளவில் ஏற்றுமதி வருமானத்தில் 1.3 டிரில்லியன் டொலர்களும்; நேரடி சுற்றுலா ஜிடிபியில் 2 டிரில்லியன் டொலர்களும் நட்டமாகியுள்ளன. உலகெங்கிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாத்துறை தொழில்வாய்ப்புகள் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ளதெனவும், இதன் தாக்கம் சுற்றுலாத்துறையை வெகுவாகப் பாதிக்குமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகத்தில் 40% வீழ்ச்சிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே காரணமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள சர்வதேச ரீதியில் பயணிகள் நடமாட்டத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், சுகாதார நெருக்கடியான நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதன் மூலம், சுற்றுலாத் துறையை ஒரு வலுவான, நிலையான மற்றும் விரிவான சுற்றுலாத்தொழில் துறையாக மாற்ற முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கோவிட் பிந்தைய நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளதாகக் கூறினார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தடுப்பூசித்திட்டம் நாடு முழுவதும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை இப்போது பாதுகாப்பான நாடாக மாறியுள்ளதால், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப உலக நாடுகள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டது முதல் இங்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,365 ஆக இருந்ததெனவும், அதில் 323 மட்டுமே தொற்றாளர்களாகப் பதிவாகியிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கோவிட் தடுப்பூசித்திட்டம் மூலம் நாடு இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.