- பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையே சுற்றுலாத்துறை மேம்படுத்தலுக்கான இணைந்த திட்டம் ...
- கோவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு அரசு அதிக கவனம் …
- இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரான்ஸ் சுற்றுலாத்துறை இராஜாங்க செயலாளரிடமிருந்து உறுதிமொழி ...
வருடாந்த சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா வர்த்தக கண்காட்சி (IFTM TOP RESA 2021) நேற்று (05) ஆரம்பமாகியது. இக்கண்காட்சி பிரான்சின் பாரிஸ் நகரில் 05 முதல் 08 வரை நடைபெறவுள்ளது. இதனை பிரான்ஸ் சுற்றுலாத்துறை இராஜாங்க செயலாளர் திரு. JEAN BATISTE LIMOYNE ஆரம்பித்து வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இதில் கலந்துகொண்டார். கோவிட் தொற்றுநோயின் பின்னர் சர்வதேச சுற்றுலா கண்காட்சிகளில் இலங்கை தனது பங்கேற்பை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும், இந்த வருடத்தில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது கண்காட்சி இதுவாகும்.
இந்த சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் பல வருடங்களாக இலங்கை பங்கேற்று வருகிறது. இந்த ஆண்டு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 16 பயண முகவர்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். சுமார் 170 நாடுகள் இதில் பங்கேற்பதோடு, 1,700 இற்கும் மேற்பட்ட வணிகச்சின்னங்கள் மற்றும் 34,000 சுற்றுலா வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த வருடத்திற்கான நிகழ்வில் சுமார் 150 அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காட்சிக்கூடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஹன் பிரதீப் விதான, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அமைச்சு ஆலோசனைக் குழுவின் இணைப்பாளர் திரு. நிமேஷ் ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு. ருக்ஷன மல்லவராச்சி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. விரங்க பண்டார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு கண்காட்சிக்கூடத்தை அமைத்திருந்தது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் திரு. அசோக் பத்திரகே மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியைப் பார்வையிட்டபின், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்காட்சிக்கூடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பிரான்ஸ் இராஜாங்க செயலாளருக்கு இடையே ஒரு விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே ஒரு இணைந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். மேலும், கோவிட் தடுப்பூசித்திட்டத்தின் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக மாறியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் முழுமையாக ஆதரவளிப்பதாக சுற்றுலாத்துறை செயலாளர் திரு. JEAN BATISTE LIMOYNE தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் பரவலால் சுற்றுலாத்துறை நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உலகெங்கிலுமுள்ள அனைத்து நாடுகளுடனும் திட்டமிடப்பட்டதொரு செயற்றிட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். கோவிட் பிந்தைய சூழலில் இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப ஒரு விஷேட செயல்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான இடமாக இலங்கை கவனத்தை ஈர்த்துள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகம் வந்திறங்கிய நாடுகளில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காட்சிக்கூடத்தில் பல விஷேட கலந்துரையாடல்களில் பங்கேற்றார். பிரெஞ்சு சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. எதிர்காலத்தில் அதிக பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தர வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டுக் கொண்டார். அவர்களுக்காக சிறப்பான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.