இலங்கையில் கோவிட் தடுப்பூசித் திட்டம் தொடர்பாக நியூசிலாந்து அரசாங்கம் தனது பாராட்டைத் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை (01) சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான கலந்துரையாடலின்போது, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் இதனை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா ஊக்குவிப்பு தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாட்டின் கோவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசித்திட்டம் குறித்து உயர்ஸ்தானிகர் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் விசாரித்தறிந்தார். மேலும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மொத்த மக்கள்தொகையில் 70% க்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 90% க்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும், தற்போது 20-30 மற்றும் 15-20 வயதுக்குட்பட்ட குழுக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். திரு. ரணதுங்க கோவிட் ஒடுக்குவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் மற்றும் சுகாதாரப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட அனைத்துத்துறைகளாலும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு விளக்கிக் கூறினார். இதை மிகவும் பாராட்டிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், கோவிட் ஒடுக்குமுறைக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த நேரத்திலும் உதவத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
நியூசிலாந்து தற்போது பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருக்கும் நாடு என்றும், அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையுடன் ஒரு விரிவான சுற்றுலாத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாவுக்காக நியூசிலாந்து கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட பிறகு, இரு நாடுகளும் இணைந்து சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை தொடங்க தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்ததுடன் அதற்கான திட்டங்கள் ஏற்கனவே சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதித் தலைவர் திரு. ஆன்ட்ரூ டிராவலர், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி, விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. மாதவ தேவசுரேந்திர மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.