இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, ஒரு இணைந்த குழு அமைக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலா ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்த குழு நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறுகிறார்.
இலங்கைக்கான எகிப்திய தூதுவர் அதிமேதகு ஹுசைன் எல் சஹார்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கிடையில் அண்மையில் சுற்றுலாத்துறை அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளின் சுற்றுலாத்துறை அலுவலகர்ளுடன் சிறப்பு கலந்துரையாடல்களை நடத்தவும், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. புள்ளிவிவரங்களின்படி ஆண்டுதோறும் சுமார் 5,000 எகிப்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
எகிப்து தூதுவர் இலங்கைக்கு வருகை விசாக்களை (Visa on arrival) பெறாத ஏழு நாடுகளில் எகிப்தும் ஒன்று எனக் குறிப்பிட்டு, அவற்றை அகற்றவும் பிரேரணை செய்தார். இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கையில் கோவிட் தடுப்பூசி திட்டத்தை எகிப்திய தூதுவர் வரவேற்றதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு எகிப்திய அரசு முழுமையாக ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
எகிப்திய தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. கரீம் அபுலெனைன், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.