06 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சிலிருந்து இலங்கைக்கு நிறைந்த பயணிகளுடன் ஸ்ரீலங்கனின் முதல் விமானம் வந்திறங்கியது. பிரான்ஸ் பாரிஸில் உள்ள Charles De Gaulle விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 564 என்ற விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கை வந்தடைந்தனர். அவர்களில் ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகளாக இருந்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஆறு வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை நேற்று (31) ஆரம்பித்தது. UL 564 என்ற விமானம் நேற்று அதிகாலை 01 மணியளவில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு இன்று (01) அதிகாலை 04.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இலங்கை வந்துள்ள பல இலங்கையர்கள் பல வருடங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர். இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இச்சேவை மேலும் விரிவுபடுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வாராந்தம் மூன்று விமானங்களை ஞாயிற்றுக்கிழமை (31) முதல் இயக்குகின்றது. எதிர்காலத்தில் பிரான்சில் இருந்து வரும் விமானங்களில் ஆசனங்களின் முன்பதிவுகள் விரைவாக செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்திறங்கும் நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். அக்டோபர் 01 முதல் அக்டோபர் 24 வரை மட்டும் நாட்டிற்கு வந்திறங்கிய 16,451 சுற்றுலாப் பயணிகளில், 453 பேர் பிரான்சை சேர்ந்தவர்களாவர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) முதல் இலங்கைக்கான ஏர் பிரான்ஸ் சேவையும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இச்சேவை மூலம் நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.