இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 06 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை 01 மணியளவில் பிரான்சின் பாரிஸ் நகரின் Charles De Gaulle விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புறப்படுவதுடன், அதே தினம் மாலை பிரான்சில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வரவுள்ளது.
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2015 இல் இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உலகின் பல்வேறு இடங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் பிரான்சின் பாரிஸ் நகருக்கு நேரடி விமான சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரான்சின் பாரிஸில் உள்ள Charles De Gaulle விமான நிலையத்திற்கு பயணிப்பதற்கு எடுக்கும் நேரம் சுமார் 10 மணித்தியாலங்களாகும். முதல் விமானப் பயணத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சாணக்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள செரண்டிப் மண்டபத்தில் எளிமையான வைபவமொன்று இடம்பெற்றது. எதிர்காலத்தில் பல புதிய இடங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு தேசிய விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவை அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், ஸ்ரீலங்கன் விமான சேவையை நாட்டின் தேசிய விமான சேவையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.