- இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையம் குஷிநகரில் திறந்து வைக்கப்பட்டது.
- புதிய சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையின் விமானம் முதலில் தரையிறங்கியது.
- அனுநாயக்க தேரர்கள் உட்பட பிக்குகள் நூறு பேர் குஷிநகருக்கான முதல் விமானத்தில் பயணம்.
- அமைச்சர் நாமல் தலைமையில் 08 பிரமுகர்கள் குஷிநகருக்கு பயணமானார்கள்.
- குஷிநகர் விமான நிலையத்தின் திறப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான சமய உறவுகளின் ஒரு புதிய அத்தியாயம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையம் குஷிநகரில் (முன்னைய குஷிநாரா நகர்) திறந்து வைக்கப்பட்டது. குஷிநகர் புதிய சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யுஎல் 1147 ஆகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளின் பேரில் முதல் விமானம் இந்தியாவிற்கு பயணித்தது.
இன்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில், அனுநாயக்க தேரர்களுடன் நூறு பௌத்த பிக்குகள் குஷிநகரை வந்தடைந்தனர். மேலும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையிலான விசேட குழுவும் இதில் பயணமானார்கள். இந்த குழுவில் இராஜாங்க அமைச்சர்களான விஜித பேருகொட, சிசிர ஜயக்கொடி, டி.வி.சானக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகிய பிரமுகர்கள் அடங்கியிருந்தனர். விமான நிலைய திறப்பு விழாவில் விருந்தினர்களை வரவேற்க இந்திய பிரதமர் புதிய குஷிநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய பிரதமரின் வேண்டுகோளின் பேரில், குஷிநகரின் பௌத்த பக்தர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வாஸ்கடுவே விகாரையில் வைக்கப்பட்டிருந்த கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் இந்த விமானம் மூலம் கொண்டுவரப்பட்டிருந்தன.
திறப்பு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் இரண்டு வரலாற்று புகைப்படங்களை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தரின் மூன்றாவது விஜயமான களனி ராஜமஹா விகாரையில் பிரபல இலங்கைக் கலைஞர் சோலியஸ் மெண்டிஸால் வரையப்பட்ட இரண்டு சுவரோவியங்களும் குஷிநகர் விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வென்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இந்த பயணம் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க - குஷிநகர் நேரடி விமானம் இரு நாடுகளுக்கும் இடையிலான சமய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் தம்பதிவ செல்லும் இலங்கை பௌத்த யாத்திரீகர்களுக்கு இந்த சேவை மிகவும் வசதியாக அமையுமென்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
புத்தரின் மறைவு இடம்பெற்ற உன்னதமான நந்தவனம் அமையப்பெற்ற குஷிநாரா நகரமே குஷிநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் வட பகுதியில் உள்ள குஷிநகர், புத்தரின் காலத்திற்கு முன்பே குசாவதி என்று அழைக்கப்பட்டது. பெரிய பரிநிர்வாண சூத்திரத்தின்படி, புத்தர் குஷிநாராவுக்கு வருகை தந்து, இறுதியில் அன்னாரின் மறைவின் பின்னர் அப்போதைய தர்மாசோக்க மன்னர் அங்கு ஒரு விசேட தூபியை நிர்மாணித்தார்.


