மட்டக்களப்பு விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கேளிக்கை சவாரிகளை (Joy Rides) அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன் முதல் கட்டம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கேளிக்கை சவாரி ஒரு குறுகிய தூர விமானப் பயணமாகும். இது பயணிகளை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதன்படி, கடந்த வாரம் 03 விமானங்களிலிருந்து 36 பயணிகள் இக்கேளிக்கைப்பயணத்தில் இணைந்ததோடு, அவர்கள் மட்டக்களப்பு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்பரப்பில் சுமார் அரை மணி நேரம் உலாவந்தனர்.
மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக இந்த கேளிக்கை சவாரித்திட்டம் செயற்படுத்தப்பட்டது. தற்போது மட்டக்களப்பு விமான நிலையத்தில் இயங்கும் இந்த விமான சவாரியானது, எதிர்காலத்தில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களில் செயற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
1958 இல் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம், 1983 இல் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மகிந்த ராஜபக்ச சனாதிபதியின் அரசாங்கத்தின்போது (2012), மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயங்கத் தொடங்கியது.
2018 ஆம் ஆண்டில் 1180 விமானச் செயற்பாடுகள் இடம்பெற்றன. 2019 இல் 864 விமானச் செயற்பாடுகளும், 2020 இல் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் 174 விமானச் செயற்பாடுகளும் இடம்பெற்றன. 348 ஏக்கர் பரப்பளவு கொண்ட மட்டக்களப்பு விமான நிலையம் 1,368 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்டதுடன், 60 விமானச் செயற்பாடுகளையும் கையாளக்கூடியது.