இரசியா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையேயான யுத்தத்தின் காரணமாக தமது நாட்டுக்கு திரும்ப செல்ல முடியாத உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் விசாக் காலத்தை நீடிப்புச் செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். நாளை (28) ஆம் திகதி நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தற்பொழுது இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்கப்படுவது குறைந்தது ஒரு மாத காலத்திற்கு எனவும் தற்பொழுது எமது நாட்டில் தங்கியுள்ள உக்ரேன் நாட்டு மக்களின் வீசா முடிவடையும் காலத்தை கவனத்திற் கொண்டு தேவையான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கைகளுக்கு ஏற்ப தற்பொழுது உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் 4000 பேர்களுக்கு அண்மிய தொகையினர் எமது நாட்டில் தங்கியிருப்பதுடன் இரசியா நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11500 இற்கு அண்மிய தொகையினர் இலங்கையில் தங்கியுள்ளனர்.