கொவிட் தொற்று நோய் நிலைமையின் கீழும் இலங்கை அரசு தொடர்ச்சியாக நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதையிட்டு யப்பான் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. எதிர் காலத்தில் இலங்கையில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாரிய அளவான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு யப்பான் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாக இலங்கைக்கான யப்பானின் புதிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்கள் கூறினார்.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுடன் கடந்த (22) ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது யப்பான் நாட்டின் புதிய தூதுவர் இது பற்றிக் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு சுற்றுலா அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
யப்பான் நாட்டின் ஒத்துழைப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் செயற்படுத்தப்படும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டத்தின் தற்பொழுதைய முன்னேற்றம் பற்றி தனது பாராட்டை தெரிவித்த யப்பான் தூதுவர், கொவிட் தொற்று நோய் நிலைமையை ஒரு தடையாக கவனத்திற் கொள்ளாது செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கை மற்றும் யப்பானுக்கிடையேயான சுற்றுலா மற்றும் முதலீட்டு மேம்பாடு தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாடொன்றை மேற்கொள்வதற்கு உடன்பாட்டைத் தெரிவித்த யப்பான் நாட்டின் புதிய தூதுவர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு யப்பான் முதலீட்டாளர்கள் அதிக விருப்பம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
யப்பான் நாட்டின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு விசேட ஆர்வத்துடன் பணியாற்றுவதாகவும் அது தொடர்பாக யப்பான் நாட்டில் விசேட மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்ளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள்.
இந்நாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக தூதுவருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களின் தலையீட்டின் படி தற்பொழுது இலங்கை மக்களில் 90 % சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் கூறினார். இதன் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கோ முதலீடு செய்வதற்கோ பயப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கான யப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தலைவர் Katsuki Kataro, முதற் செயலாளர் மற்றும் பொருளாதாரப் பிரிவின் தலைவர் Hoshiai Chibaru, இரண்டாவது செயலாளர் Muraleami Takashi, விமானநிலைய மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர, சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா சன்னசூரிய, விமானநிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனிகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜீ.ஏ. சந்திரசிறி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.