இந்த வருட இறுதிக்குள் மேலும் ஐந்து புதிய விமான சேவைகள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (27) அமைச்சில் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை அமைச்சு நடத்திய கலந்துரையாடலின் விளைவாக புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்கின்றன.
அதற்கிணங்க, சுவிட்சர்லாந்தில் உள்ள ஏடில்வேய்ஸ் விமான சேவை நவம்பர் 1ஆம் திகதி முதல் வாராந்தம் விமானத்தை இயக்கவுள்ளதுடன், ரஷ்யாவின் ஏரோ ஃப்ளோட் வாரத்திற்கு இரண்டு முறை பறக்கவுள்ளது. நவம்பர் 3 முதல் பிரான்ஸின் ஏர் பிரான்ஸ் வாரத்திற்கு மூன்று முறை பறக்கவுள்ளது.
அதுபோன்று டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ரஷ்யாவின் ஏர் அஸூர் வாரத்திற்கு இரண்டு முறையும், இத்தாலியின் நியோஸ் ஏர் வாரத்திற்கு இரண்டு முறையும் பறக்கத் தயாராகவுள்ளது.
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இவ்வாறான சர்வதேச விமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே விமான சேவையின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.