விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பயணிகளுக்கு பிசிஆர் சோதனைகள் நடத்தும் செயல்முறை நிறுத்தப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார். இந்த பிசிஆர் சோதனைகளை நடத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக தொடங்கப்பட்ட பிசிஆர் ஆய்வகம் மூடப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்று துணைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்காக, இம்மாதம் 25 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 03 மணி நேரத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதென ஆய்வகத்தின் எதிர்கால செயல்பாடுகளை விளக்குவதற்காக கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உப தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத் துணைத் தலைவர் திரு ரஜீவ் சூரியாராச்சி பின்வருமாறு தெரிவித்தார்.
"விமான நிலையத்தில் நாங்கள் தற்போது பி.சி.ஆர். ஆய்வை மேற்கொள்கிறோம். இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பி.சி.ஆர். ஆய்வகம் மூடப்பட்டுள்ளது என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இது ஒரு இயந்திர உபகரணங்களுடன் தொடர்புபட்ட சேவை. அப்போது பல்வேறு தொழில்நுட்பப் பிழைகள் எழலாம். எனவே, அந்தச் செயல்பாட்டில் எழும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வை வழங்கி செயல்முறையை சரிசெய்கிறோம்.
இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்று, 14 நாட்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு மட்டுமே நாங்கள் இந்த சோதனைகளைச் செய்கிறோம். இந்த அறிக்கை 03 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளோம். எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் சில அறிக்கைகள் தாமதமாகியிருந்தது. இதுபற்றி விசாரித்தபோது சிலரால் பிழையாக கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற பிரச்சனைகளால் இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிய வந்தது. நாங்கள் இப்போது அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இது எளிதான பணி அல்ல. இது ஒரு பெரிய செயல்முறை. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இலங்கைக்கான விமானப் பயணிகளின் வருகையின் பின்னரான செயல்முறையை விரைவூபடுத்த விரும்பினார். அதன்படி, இந்த பி.சி.ஆர். சோதனைகளை விரைவாக மேற்கொள்வதற்கான செயல்முறை தொடங்கியது. நாங்கள் ஏற்கனவே சோதனை மேற்கொண்ட நிலையில் உள்ளோம். அது ஒருபோதும் நிறுத்தப்படவில்லை.
இது தொடர்பாக சில தவறான பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகள் தொடர்கின்றன.
இது நேற்று தொடங்கிய செயல் அல்ல என்பதையும் நான் கூற விரும்புகிறேன். இந்த ஆய்வகத்தின் அமைச்சரவைப் பத்திரம் ஜூலை 09 அன்று அங்கீகரிக்கப்பட்டது. நாங்கள் இதை 2 மாதங்களுக்குள் நிறுவினோம். நாங்கள் இப்போதும் செயல்முறையைத் தொடர்ந்து கொண்டுசெல்கின்றோம்."