- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நிறுத்தப்பட்ட இலங்கைக்கும் போலந்து நாட்டுக்குமிடையேயான நேரடி விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பம்......
- Lot Polish முதலாவது விமானம் நாளை இலங்கைக்கு ........
- இலங்கைக்கும் போலந்து நாட்டுக்குமிடையேயான சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கான திட்டம்.......
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நிறுத்தப்பட்ட இலங்கைக்கும் போலந்து நாட்டுக்குமிடையேயான நேரடி விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்படும். அதன் பிரகாரம் போலந்து Lot Polish விமானக் கம்பனி நாளை (08) ஆம் திகதி முதல் போலந்துக்கும் இலங்கைக்குமிடையேயான நேரடி விமான பயணங்களை ஆரம்பிக்கும். அதன் பிரகாரம், திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் Lot Polish விமானம் இந்நாட்டிற்கு விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மற்றும் இந்நாட்டுக்கான போலந்து நாட்டின் தூதுவர் பேராசிரியர் Adam Barakooski அவர்களுக்குமிடையே இன்று (07) ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது பற்றி தெரிவிக்கப்பட்டது. போலந்து நாட்டின் தூதுவர் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களை சுற்றுலா அமைச்சு அலுவலத்தில் சந்தித்தார்.
கொவிட் தொற்று நோய் காரணமாக இலங்கைக்கான வருகையை நிறுத்திய பல விமானக் கம்பனிகள் தற்பொழுது மீண்டும் இந்நாட்டுக்கு வருகை தருவதற்கு நட்டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு குறிப்பிட்டார். கொவிட் தொற்று நோயிற்கு முன்னர் 37 விமானக் கம்பனிகள் இந்நாட்டுக்கு நேரடி விமான பயணங்களை மேற்கொண்டதுடன் நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் இது வரை 23 விமானக் கம்பனிகள் மீண்டும் இந்நாட்டுக்கு பிரயாணிகள் விமான போக்குவரத்தினை ஆரம்பித்துள்ளன. இன்னும் 08 விமானக் கம்பனிகள் தற்பொழுது விமான சரக்கு போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பித்துள்ளன என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் போலந்து ஊடாக சுற்றுலாக் கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கலாச்சார ரீதியான சுற்றுலாக் கைத்தொழில் (Cultural Tourism) மற்றும் நன்னோக்கு சுற்றுலாக் கைத்தொழில் (Wellness Tourism) என்பன தொடர்பாக போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகமான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் இங்கு குறிப்பிட்டார். இலங்கை மற்றும் போலந்து நாட்டு சுற்றுலா அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையேயான விசேட கலந்துரையாடலொன்றை எதிர்காலத்தில் நடாத்துவதற்கும் அதன் பிரகாரம் சுற்றுலாப் பிரயாணிகளை அதிகமாக இலங்கைக்கு வரவழைப்பதற்கு நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் புது டில்லியில் அமைந்துள்ள போலந்து தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் Ewa Stankiewicz, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விமான நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி செயன்முறை வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பிரணாந்து, பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க போன்றோர் கலந்து கொண்டனர்.