இலங்கையும் தென் கொரியாவும் இணைந்து சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை உருவாக்கவுள்ளன. இரு நாடுகளிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் (Woonjin Jeong) மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கடந்த 29ஆம் திகதி இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு மிகுந்த ஆர்வமாகவிருப்பதாக கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இலங்கையும் ஒன்றாக திகழ்வதாகவும், நாட்டின் இயற்கை அழகை அனுபவிப்பதில் கொரியர்களுக்கு தனி ஆர்வமிருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கொரியாவில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், உலகின் பல முன்னணி நாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தொற்றுநோய் நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான கொரியன் ஏர்லைன்ஸ் விமானங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் கொரியாவில் நடைபெறும் கோஸ்டா (Costa) சுற்றுலா கண்காட்சியில் இலங்கையை பங்கேற்கச் செய்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொரியத் தூதுவருடன் கொரிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Lem So Yean, ஆராய்ச்சி அலுவலர் Byeon Jeong Hun, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.