வருடாந்த சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா வர்த்தக கண்காட்சி (IFTM TOP RESA 2021) பிரான்சின் பாரிஸ் நகரத்தில் நாளை (05) ஆரம்பமாகின்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் குழுவினர் நேற்று (04) புறப்பட்டுச் சென்றனர். பிரான்சின் பாரிசில் இம்மாதம் 08 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சுற்றுலா வர்த்தக கண்காட்சியில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாத்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
IFTM TOP RESA கண்காட்சி என்பது வர்த்தக ரீதியான சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் குழுமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரான்சின் முதன்மையான சுற்றுலா வர்த்தக கண்காட்சியாகும்.
சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா கண்காட்சி தொழில்முறை சுற்றுலாத்துறையில் ஒரு முன்னணி கண்காட்சியாகும். முதலில் இது TOP RESA என்று அழைக்கப்பட்டது. 2009 இல் இது வெர்சாலில் IFTM TOP RESA என மறுபெயரிடப்பட்டது.
IFTM கண்காட்சியானது, பிரெஞ்சு மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறைகளுக்கு வர்த்தக ரீதியிலான சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்தக்கூடிய ஒரு முதன்மையான சந்திப்பு மையமாகக் கருதப்படுவதுடன், இந்நிகழ்வு புதிய வர்த்தகம், வாடிக்கையாளர் உறவுகள், வணிக பரிமாற்றல்கள் மற்றும் உறவுகளை கட்டியெழுப்புதலை தீர்மானிக்கக்கூடியதும், உயர்மட்ட வல்லுநர்களை கவரும் வாய்ப்பாகவும் அமையும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
பல ஆண்டுகளாக இந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கை பங்கேற்று வருகிறது என்பதுடன், 2019 ஆம் ஆண்டில் மட்டும் 28 இலங்கை பயண முகவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
200 க்கும் மேற்பட்ட பயண முடிவிடங்கள், 1,700 வணிகச்சின்னங்கள் மற்றும் 34,000 பயண வல்லுநர்கள் இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பதுடன் இந்த ஆண்டு வர்த்தக கண்காட்சியில் சுமார் 150 அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
பிரான்சில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏர் பிரான்ஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார். ஏர் பிரான்ஸ் இலங்கைக்கு நவம்பர் 01 ஆம் திகதி முதல் புதிய விமான சேவையைத் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து திரு ரணதுங்க பிரான்ஸ் சுற்றுலாத்துறை அமைச்சருடன் கலந்துரையாட உள்ளார். மேலும், பிரெஞ்சு மற்றும் இலங்கை தொழிலதிபர்களுடன் நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.