- மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வசதிகளைக் கொண்ட விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும்....
- அதற்கு முத்தரப்பு உடன்படிக்கையொன்று......
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வசதிகளைக் கொண்ட உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை வழங்குதல் இதன் குறிக்கோளாகும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் கம்பனி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் விமானப் படை என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த உடன்படிக்கையை தற்பொழுது தயார் செய்து வருகின்றது. சிவில் மற்றும் இராணுவ செயற்பாடுகளுக்கிடையே தெளிவான பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு இதன் ஊடாக எதிர்பார்க்கின்றது. விமான ஓடு பாதையின் வடக்கு பிரதேசத்திற்கு அருகாமையில் விமானப் பயண கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் மற்றும் தீயிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலைய வளாகத்தினுள் வர்த்தக முதலீட்டுச் சந்தர்ப்பங்களை இனங் கண்டு கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றும் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். விமான போக்குவரத்துத் துறைக்குள் வருகின்ற மற்றும் வராத முதலீட்டுச் சந்தர்ப்பங்களை பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல்கள், சுற்றுலாத்துறையில் செயற்படுபவர்களுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டமொன்றும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, கொவிட் தொற்று நோய் காரணமாக தடைப்பட்ட யாழ்ப்பாணம் – கொழும்பு விமானப் பயணங்களை மீண்டும் துரிதமாக தொடங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அதனுடன் தொடர்புடைய கம்பனிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் மற்றும் இந்த வருடத்தின் ஆரம்ப காலாண்டின் போது அந்த விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இயலுமை கிடைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.