- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதி தொடர்பாக புதிய போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்படுகிறது....
- இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது....
- செலவிடப்படும் தொகை ரூபா 600 மில்லியன் ஆகும்.....
- தற்போது விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனைய கட்டிடமும் மறுசீரமைக்கப்படும் ......
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தொடர்பாக புதிய போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். இந்த செயற்றிட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கட்டம் 1 இன் கீழ் 660 மீற்றர் நீளமான நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இரு வழிப்பாதை எவரிவத்தை சந்தியிலிருந்து முதலீட்டுச் சபை நுழைவு வரை நிர்மாணிக்கபடும். அதன் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. அதே சமயம் எவரிவத்தை சுற்று வட்டப்பாதை சந்தியும் அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டம் 2 இன் கீழ், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தேவையான வடிகால் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதுடன் முதலீட்டுச் சபை நுழைவாயிலிலிருந்து மினுவங்கொட வரை 1050 மீற்றர் நீளமுள்ள நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இருவழிப்பாதை நிர்மாணிக்கப்படும். இச் செயற்றிட்டத்தின் மொத்தச் செலவு 600 மில்லியன் ரூபா ஆகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து வருகைகள் மற்றும் வெளிச்செல்கைகள் தொடர்பாக பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனையின் பின்னரே விமான நிலையத்திற்குள் நுழைய முடியும் என்பதோடு வருகை மற்றும் வெளியேறும் முனையங்களுக்கு எவ்வாறு பிரவேசிப்பது என்பதற்கான சமிஞ்சை கட்டமைப்புக்களை நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் முனைய கட்டிடத்தொகுதியை பயணிகளின் வசதிக்காக மீள்கட்டமைப்புச் செய்வதற்கும் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள்தெரிவித்துள்ளார்கள். விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் இயலளவு பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வொன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் முனைய கட்டிடத்தை குடியகல்வு பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூபா 430 மில்லியன்கள் ஆகும். இச் செயற்றிட்டத்தின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வு பகுதி, மேல்மாடிக்கு மாற்றப்படவுள்ளதுடன், மேலும் 04 குடிவரவு கருமபீடங்கள், மேலும் 05 நுழைவுக் கருமபீடங்கள், இரண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு லிஃப்ட் மற்றும் ஒரு புதிய படிக்கட்டுத் தொகுதி, மேலதிக இடவசதிகள், உணவகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிப்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இந்தச் செயற்றிட்டத்தை இந்த ஆண்டின் போது நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
06 மில்லியனாக இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளை கையாளும் இயலளவு தற்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், விமான நிலைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பயணிகளைக் கையாளும் இயலளவு 15 மில்லியனாக அதிகரிக்கும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதிக்குள் நிர்மாணிப்புப் பணிகளை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.